ஈரோட்டிலுள்ள அரசு கல்லூரி நிர்வாகத்தின் தவறான வழிகாட்டுதலால், கல்லூரி படிப்பை இழந்து வீதியில் தவித்த மாணவியை, தனது கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதோடு மூன்று ஆண்டுக்குமான முழு கல்விச்செலவையும் ஏற்பதாக எஸ்.ஆர்.எம் கல்விக்குழும தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த வீ சித்தேரி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் சத்யாதேவி. இவர் 12 ஆம் வகுப்பில் வேளாண்மை பாடப்பிரிவு படித்து தேர்ச்சி அடைந்து ஈரோட்டில் உள்ள கல்லூரியில் வேளாண்மை படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தார்.
ஆனால் மாணவிக்கு மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவு ஒதுக்கியதோடு சுயநிதி பிரிவில் சேர்த்து கல்வி கட்டணமாக 22 ஆயிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டனர். முதல் பருவதேர்வு வரை படித்து தேர்வு எழுதிய மாணவி 12 ஆம் வகுப்பில், வேதியியல் படிக்காததைக் காரணம் காட்டி தகுதியிழப்பு செய்தனர்.
இதனால் கல்லூரி கனவு கானல் நீரான நிலையில் கல்விக்காக பெற்ற கடனை அடைக்க தாயுடன் சேர்ந்து கொளுத்தும் வெயிலில் கேபிள் பதிக்கும் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார் சத்யாதேவி, இது குறித்த செய்தி வெளியான நிலையில், அதனை பார்த்து ஏராளமானோர் அந்த மாணவிக்கு பண உதவி அளிக்க முன்வந்தனர்.
இவர்களில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் , அந்த மாணவியை தனது கல்லூரியில் விவசாய படிப்பில் சேர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளதோடு, மாணவி சத்தியாவுக்கான மூன்று ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணம், தங்கும் விடுதிக்கட்டணம், உணவுக் கட்டணம் என அனைத்தையும் தானே ஏற்பதாக அறிவித்து நெகிழவைத்துள்ளார்.
பாரிவேந்தர் ஏற்கனவே தனது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 300 மாணவ மாணவிகளுக்கு இது போன்று முழுமையாக இலவச கல்வியை வழங்கி வரும் நிலையில் மாணவி சத்யாதேவிக்கும் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை எஸ்.ஆர் எம் கல்வி குழுமம் வழங்கி வருவது குறிப்பிடதக்கது.
இருப்பதை இல்லாதோருக்கு அள்ளிக்கொடுக்கும் மனதும் பாராட்டுக்குறியதே..!