தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த அரசு ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவர், விவசாயத்தில் பி.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார். தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் துறை உதவி தொழில்நுட்ப மேலாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார்.தற்போது, தலைவாசல் வட்டார வேளாண் அலுவலகத்தில் இவர் பணியில் இருக்கிறார். இவர் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். அரசு பணியில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தது உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி சிலர்,சேலம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமனிடம் புகார் செய்தனர் .
தொடர்ந்து, திலகவதி விருப்பமனு தாக்கல் செய்தது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் வேளாண்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் . விசாரணையில் திலகவதி ஏற்காடு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடத்தில் அறிக்கையும் அளித்தனர். தேர்தல் நடத்தை விதிமீறல் அடிப்படையில் சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராமன் வேளாண்துறை அதிகாரிகள் தந்த அறிக்கையின் அடிப்படையில் திலகவதியை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து திலகவதி கூறுகையில்,'' என் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் தி.மு.கவில் உள்ளனர். திமுக மகளிரணியில் தொண்டரணி துணை அமைப்பாளராக இருக்கிறேன். மக்கள் சேவை செய்வதற்காக நான் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. விடுமுறை எடுத்து விட்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். ஏற்காடு பகுதியில் பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் வாழப்பாடி பகுதிகளில் பணி புரிந்து வந்துள்ளதால் என்னை பலருக்கும் தெரியும். இதனால், ஏற்காடு பகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தேன். தேர்தலுக்காக 5 கோடி வரை செலவு செய்ய என்னால் முடியும் '' என்று தெரிவித்துள்ளார்.