குருநாதர் வசித்த வீட்டை இடித்த ஆத்திரத்தில் அவரின் மனைவியை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி(வயது 70) இவரது கணவரின் பெயர் அகத்திலகம் . இவர், சித்த வைத்தியராவார். கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக அகத்திலகமும் மலர்கொடியும் அருகருகேயுள்ள வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தன் வீட்டுக்குள்ளேயே அகத்திலகம் தியானம் செய்வதற்கு தனியாக அறை அமைத்துள்ளார் . தீராத வியாதிகளுக்கு மூலிகை இலைகளைப் பறித்து மருந்தாக மாற்றி குணப்படுத்தும் திறமை அகத்திலகத்திடம் இருந்துள்ளது. அகத்திலகத்திடம் தீராத நோய் ஒன்றுக்காக சிகிச்சை பெற மணி என்பவர் வந்துள்ளார். மணியின் நோயை அகத்திலகம் மூலிகை மருத்துவம் மூலம் குணப்படுத்தியுள்ளார். இதனால், அகத்திலகத்திடம் அன்பு கொண்டு, அதே வீட்டில் மணியும் தங்கி விட்டார். அகத்திலகத்தை குருவாக ஏற்று அவரிடத்தில் மூலிகை மருத்துவத்தையும் படித்து வந்தார்.
அகத்திலகத்திடம் தங்கி தியானம் செய்வது மருந்துகள் தயாரிப்பது குறித்தும் மணி கற்று வந்தார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அகத்திலகம் இறந்துவிட்டார் . அகத்திலகம் இறந்த பிறகு வீட்டை மணி பராமரித்து வந்தார். தன் குருநாதர் தியானம் செய்த அறையை பயபக்தியுடன் பராமரித்ததாக சொல்லப்படுகிறது. அங்கு, குருநாதருக்கு கோயில் கட்டவும் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு மணியிடம் வந்த மலர்கொடி இந்த வீட்டை தற்போது வேறொரு நபருக்கு 25 லட்சத்துக்கு விட்டதாக கூறியுள்ளார். இதனால், மணிக்கும், மலர்கொடிக்கும் தகராறு ஏற்பட்டது.
இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு போலீசார் பலமுறை சமரசம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டை வாங்கியவர்கள் அங்கிருந்த தியான அறை மற்றும் பூஜை அறைகளை இடித்து மாற்றி கட்டியுள்ளனர். தனது குருநாதர் வாழ்ந்த வீட்டை இடித்துவிட்டதாலும் குருநாதருக்கு கோயில் அமைக்க முடியாத கோபத்தில் மணி இருந்துள்ளார். மது போதையில் வீட்டுக்கு வந்த மணி பக்கத்து வீட்டில் படுத்துக் கொண்டிருந்த மலர்கொடி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்து விட்டார்.
பின்னர், குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் மணி சரண் அடைந்தார். போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.