நெய்வேலியில் மகள் திருமணம் முடிந்து 15 நாள்களில் என்.எல்.சி தொழிலாளி கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி வட்டம் 13 பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் . என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மகளுக்கு திருமணமாகி 15 நாள்கள்தான் ஆகிறது. மகள் திருமணத்துக்காக சிலரிடத்தின் கடன் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தன் வீட்டருகே உள்ள பழைய கட்டத்தில் தற்கொலை செய்து முருகேசன் இறந்து போனார். வெகுநேரமாகியும் முருகேசன் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தேடிப் பார்த்தனர். அப்போது, முருகேசன் தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த பேண்ட் கடிதம் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில் முருகேசன் கந்துவட்டி கோரப்பிடியில் நான் சிக்கியுள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதில், கடன் வாங்கிய விவரங்களும் எழுதப்பட்டுள்ளது.
நெய்வேலி வட்டம் 19 முருகனிடம் 50,000 பெற்றுள்ளேன் அவர் பல லட்சம் கேட்கிறார்.சண்முகம் நண்டுகுழி 80,000 வாங்கியுள்ளேன் அவர் பல லட்சம் கேட்கிறார். வல்லம் செந்தில்குமாரிடத்தில் 60,000 பணம் வாங்கி உள்ளேன் அவர் பல லட்சம் கேட்கிறார்.செந்தில்குமார் நண்பர் நந்தகோபால் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி என்னிடம் பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கியுள்ளார். ரத்தினகுமார் ஒரு லட்சம் வாங்கியதில் 30,000 வட்டி கொடுத்துள்ளேன் அவர் பத்து லட்சத்திற்கு எழுதி வாங்கியுள்ளார் .கோட்டேரி ஞானப்பிரகாசம் 40,000 வாங்கியதில் 2 லட்சம் கேட்டு எழுதி வாங்கியுள்ளார்.முருகவேல் வசம் 50,000 வாங்கி நான் எடுக்கவில்லை செல்வமணி என்பவரிடம் கொடுத்துவிட்டேன் எனக்கும் முருகவேலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
முருகேசனின் மனைவி இந்திராணி நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள், மற்றும் ஒப்பந்த தொழிலாளிகளிடம் சில நபர்கள் குறைந்த பணம் கொடுத்துவிட்டு அவர்களிடத்திலிருந்து ஏடிஎம் கார்டு மற்றும் சம்பள புத்தகம், வங்கி காசோலை, பாண்டுபத்திரம் போன்றவற்றை பறித்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. கந்து வட்டி கோரப்பிடியில் என்எல்சி தொழிலாளர்கள் சிக்கி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.