தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிட இருப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகமும் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தனித் தொகுதியில் எம்.எல்.ஏ தேன்மொழி போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 11 பேர் கொண்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் இறுதிவடிவம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன்அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். தொகுதி பங்கீடு முடிந்ததும், முழு அளவிலான வேட்பாளர்கள் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.வுடன் இழுபறி நீடித்துவரும் நிலையில், தே.மு.தி.க.வில் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனுவை அளித்துள்ளார்.
பாமக நிர்வாகிகள் நேற்று இரவு அ.தி.மு.க. குழுவினரை சந்தித்துப் பேசினர். சோளிங்கர், மதுரவாயல், ஆற்காடு ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.