தந்தையை கொன்றதோடு, தாயையும் கொலை செய்ய முயன்றதால், ரவுடி சிவா என்ற சிவக்குமாரை பிரபல ரவுடி அழகுராஜா தன் சகாக்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சிவக்குமார். இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 35 வழக்குகள் உள்ளன. மயிலாப்பூர், ஜாம்பஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி பெண்ணை வீட்டோடு சேர்த்து தீ வைத்து கொல்ல முயன்ற வழக்கில் ரவுடி சிவக்குமாரை துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவனிடத்திலிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பிறகு, சிவக்குமார் சிறையில் அடைக்கப்ட்டடான். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த சிவக்குமார் சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 2-வது தெருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜஸ்டின் என்பவருக்கு ரூ. 10 லட்சம் வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். கடன் தொகையை வாங்குவதற்காக ஜஸ்டினின் அலுவலகத்துக்கு கடந்த நான்கு நாட்களாக சிவக்குமார் சென்று வந்துள்ளான்.
இதை கண்காணித்த 10 பேர் கொண்ட எதிர்கும்பல் சிவக்குமாரை பின் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், மார்ச் 4 ஆம் தேதி இரவு கூட்டாளிகளுடன் சிக்கிய சிவக்குமாரை எதிர்கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. சிவக்குமாரின் தலையை கழுத்திலிருந்து துண்டித்து சிதைத்து விட்டு சென்று விட்டது.
முதற்கட்ட விசாரணையில் ஜாம்பஜார் சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். தோட்டம் சேகரின் மகன் ரவுடி அழகுராஜா,கூலிப்படை தலைவன் மதுர பாலா ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். ரவுடி சிவக்குமார்தான் தோட்டம் சேகரை கடந்த 2001 -ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தான்.
கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி சென்னை கேசினோ தியேட்டர் அருகில் தோட்டம் சேகரின் மகனும் பிரபல ரவுடியுமான அழகுராஜா தன் தயார் மலர்க்கொடியுடன் சென்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திலும் சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. தந்தையை கொலை செய்ததோடு, தாயாரையும் கொல்ல முயன்றதால், ஆத்திரத்தில் இருந்த ரவுடி அழகு ராஜா, சிவக்குமாரை கொல்ல திட்டம் தீட்டியதாக சொல்லப்படுகிறது.
சென்னை காவல் துறையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் ஏ - பிளஸ் பிரிவில் உள்ள பயங்கர ரவுடியாக உலா வந்த மயிலாப்பூர் சிவக்குமார் கள்ளத்துப்பாக்கி வைத்திருக்கும் குண்டர்படை தலைவனாக செயல்பட்டான். மயிலாப்பூரில் ஒரு வீட்டிற்குள் ஓட்டை பிரித்துக் கொண்டு இறங்கி இரட்டைக் கொலை செய்த சிவா அடுத்தடுத்து ஆறு கொலைகளில் தொடர்புடையவன்.
தென் சென்னை பகுதியில் ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு காவல் துறையினருக்கு தலைவலியாக இருந்து வந்தான். மொத்தம் 35 வழக்குகள் ரவுடி சிவக்குமார் மீதுள்ளது. இதில் 3 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் ஆகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு , ரவுடி சிவக்குமார் தன் 40 வயதில் சூர்யா என்ற பெண்ணை திருமணம் செய்தான். சாந்தோமில் நடந்த திருமணத்தில் அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அங்குள்ள, காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமாக பந்தல்போட்டு சிவக்குமார் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு மயிலாப்பூர் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரவுடி சிவக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதால் அவனின் ஆதரவாளர்கள் எதிரிகளை பழி வாங்க துடிப்பார்கள் என்பதால் போலீஸ் துறை அலெர்ட்டாகி உள்ளது.