சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய, அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையிலான ஆட்சி மன்ற குழு தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவில் 8250 மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அதிமுக தலைமை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் ஆகியோர் அடங்கிய ஆட்சி மன்றக் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தொகுதி வாரியாக யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது? என மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக ஆட்சி மன்ற குழு கருத்து கேட்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை முடிவில், அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார வியூகம், அதற்கான பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக தலைமை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.