ஒரு காலத்தில் திமுகவுக்கு நிகராக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 10 இடத்திற்கும் 15 இடத்திற்கும் தொங்கினால், கடைசியில் மக்கள் மனதில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ள பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பழ. கருப்பையா. அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஜெயித்து இனி கோலோச்சப் போவதில்லை. இப்போது தோற்றால் குடிமுழுகிப் போய்விடாது. யானை படுத்தால் குதிரை மட்டம் என்கிற பழமொழிக்கு ஏற்ப காங்கிரஸ் நல்ல கட்சி. மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜக வின் பி டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை கூறும் திமுக தான் பாஜக வின் பி டீம்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், மக்கள் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கிறார்களே என்று குறை கூறும் கிளைக் கட்சிகள் தலைமை கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு ஊழலுக்கு துணை போகிறார்கள்” என்று கூறினார்.
தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றிற்கு இடையே ஒருமாத கால இடைவெளி இருப்பது குறித்து பேசிய பழ. கருப்பையா, ”மே மாத தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவோம் என்றால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டியது தானே?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், மத்தியில் ஆள்பவர்கள் எல்லா இடங்களுக்கும் பணம் அனுப்பி விட்டார்கள் என்றும் அடுத்தவர்கள் வேட்டி அவிழ்த்து கட்டுவதற்குள் தேர்தல் நடத்தி விட வேண்டும் என அவசரம் காட்டுகிறாராகள் என்றும் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.