மும்பை குழந்தை டீரா போல முதுகுதண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த 8 மாத பெண் குழந்தையை குணப்படுத்த ரூ16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தையின் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.
கோவையை அடுத்துள்ள போத்தனூர் அம்மன்நகர் 3-வது வீதியை சேர்ந்த அப்துல்லா - ஆயிஷா தம்பதிக்கு ஸீஹா ஜைனப் என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. அப்துல்லா பால் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் வருகிறார். குழந்தை ஸீஹா ஜைனப்புக்கு Spinal Muscular Atrophy எனப்படும் அரிய வகை நோயால் பாதிப்பு உள்ளது. இதனால், அந்த குழந்தைக்கு நரம்புகள் செயல்படாமல், தசைகள் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. குழந்தை ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையை காப்பாற்ற குழந்தையின் உடலில் மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரபணு ஊசி செலுத்தினால் மட்டுமே இந்த குழந்தையை குணப்படுத்த முடியும் .
அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் ரூ. 16 கோடி ஆகும். இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது எப்படி என்று குழந்தை ஜைனப்பின் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர். தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதி உதவியை கேட்டு வரும் குழந்தையின் பெற்றோர், மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு மருத்து கிடைக்க உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த, ஐந்து மாதக் குழந்தை, டீராவுக்கு வெளிநாட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக ரூ. 6 கோடி இறக்குமதி வரி மற்றும் ஜி.எஸ்.டி. வரியை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டீராவின் பெற்றோர் crowd funding வழியாக 16 கோடி நிதி திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.