விக்கிரவாண்டி அருகே கள்ளகாதலை எதிர்த்த மகன் அடித்து கொலை. மருமகள், கள்ளகாதலனுக்கு போலீஸ் வலை. தந்தை புகாரின் பேரில் பிணம் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பனையபுரம் காலனியை சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் லியோபால் (வயது 33). வேன் டிரைவரான இவருக்கு சுஜித்தாமேரி என்ற மனைவியும் 5வயதில் மகனும் , 3வயதில் மகளும் உள்ளனர். லியோ பாலின் தந்தை சகாயராஜ் , தாய், மூத்த சகாதரர்கள் சென்னையில் வசிக்கின்றனர். கடந்த மாதம் 4- ஆம் தேதி புதுச்சேரிக்கு நண்பரின் திருமணத்திற்கு சென்ற லியோபால் வீடு திரும்ப வில்லை என்று மருமகள் சுஜித்தாமேரி, தன் மாமனார் சகாயராஜிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார் . தொடர்ந்து, பல இடங்களில் தேடியும் லியோபால் கிடைக்கவில்லை. இதையடுத்து, போலீஸில் புகார் தெரிவிக்க சகாயராஜ் முடிவு செய்துள்ளார்.
கடந்த மாதம் 21 ஆம் தேதி சகாயராஜ் தனது மருமகளிடம், லியோபாலை காணவில்லை என்பது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கலாம். நீ தயாராக விழுப்புரம் வந்து விடு. நான் சென்னையிலிருந்து புறப்பட்டு வருகிறேன் என்று சகாயராஜ் மருமகளிடத்தில் கூறியுள்ளார்.
ஆனால், சகாயராஜ் கூறியது போல மருமகள் அங்கே வரவில்லை. அதே நேரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லுாரி மாணவர் ராதாகிருஷ்ணன் (வயது 20) என்பவரையும் காணவில்லை . உடனடியாக, சகாயராஜ் மருமகளை தேடி வீட்டுக்கு சென்ற போது, அங்கு குழந்தைகள் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். குழந்தைகளிடத்தில் கேட்ட போது, ' அம்மாவை காலையிலிருந்து காணவில்லை ' என தாத்தாவிடம் குழந்தைகள் அப்பாவியாக கூறியுள்ளனர் . தொடர்ந்து மகன், மருமகளை காணவில்லை என்று விக்கிரவாண்டி போலீசில் சகாயராஜ் புகார் செய்தார்.
இந்நிலையில், மருமகள் வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டிய தடம் இருப்பதாக கூறி சந்தேகமிருப்பதாக சகாயராஜ் புகார் செய்ததன் அடிப்படையில் விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்செல்வி , டி.எஸ்.பி., நல்லசிவம் ஆகியோர் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டி பார்க்கப்பட்டது. அப்பொது குழியில் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் ஆண் சடலம் கைகள் பின்னுக்கு கட்டப்பட்ட நிலையில் இருந்தது. சடலத்தை பார்த்து தன் மகன் தான் என சகாயராஜ் உறுதி செய்தார் . சடலத்தை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் சண்முகம் , வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர் .
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லியோபால் பச்சைக்குத்தும் தொழிலை கற்க 6 மாதம் பயிற்சிக்கு சென்றிருந்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லுாரி மாணவர் ராதாகிருஷ்ணனுடன் மனைவி சுஜித்தாமேரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் தகாத உறவை லியோபால் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து லியோபாலை அடித்து கொலை செய்ததது தெரிய வந்தது. கடந்த மாதம் 21 ம் தேதி முதல் தலைமறைவாகியுள்ள இருவரையும் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்