அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிகவுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அதிமுக மற்றும் பாஜக பிரதிநிதிகள் இடையே 4வது கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பா.ஜ.க சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை பாஜக கேட்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தியாகராயர் நகரில் உள்ள தங்களின் கட்சி தலைமை அலுவலகத்திற்கு திரும்பிய பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கு அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தேமுதிகவுடன் அதிமுக தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். தேமுதிக தரப்பில் 15 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டும் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இப்போதைக்கு மாநிலங்களவை எம்பி சீட் தர முடியாது என்றும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடன்பாடு ஏற்படாமல் ஆலோசனை கூட்டம் நிறைவுற்றது. இதனிடையே தமிழ் மாநில காங்கிரசுடன் புதன்கிழமை அன்று அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.