வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாம்பல் மேடும், 4500 ஆண்டுகள் பழைமையான புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வலசை கிராமம் ஆந்திர - தமிழக மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ளது. வலசை கிராம சந்தூர் மலையடிவாரத்தில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆண்டு நடத்திய அகழ்வாய்வில் புதிய கற்கால மனிதர்கள் கால சாம்பல் மேடு இருப்பதைக் கண்டறிந்தனர். சாம்பல் மேடுகள் என்பவை ஆடு-மாடு வளர்த்து வாழ்ந்து வந்த புதிய கற்கால மற்றும் இரும்புக்கால மக்களின் வாழ்விடங்களில் காணப்படும் தொல்லியல் மேடுகளாகும்.
தமிழகத்தில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சாம்பல் மேட்டிலிருந்து புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், இரும்பு உருக்கும் குழாய்கள், விலங்குகளின் எலும்புத்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாம்பல் மேடு தொடர்பாக, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் 26 மாணவ - மாணவிகள் தற்போது இரண்டாம் ஆண்டு அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கிறுக்கலான பானை ஓடுகள், வேட்டையாடப் பயன்படுத்தும் சிறிய உருளை கற்கள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இங்கு, உணவுப் பொருட்களை அரைக்கும் கற்கள், வேட்டைக்கான நூண் கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் பெரிய கடுமண், இரும்பு கழிவுகள், சிறிய இரும்பு கத்தி, வேட்டையாடப் பயன்படுத்தும் சிறிய உருளை கற்கள், வளையல் கருங்கல், ஆபரணங்களாகப் பயன்படுத்திய சங்கு, மான்கொம்பு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அகழ்வாராய்ச்சி மாணவர்கள், “இரண்டாம் ஆண்டாக தொடரும் அகழாய்வில் சுமார் 4,400 ஆண்டுகள் பழமையான பொருட்களைக் கண்டறிந்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
இதன் அகழாய்வு மூலம், வலசை பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் சிறிய கூட்டமாக வாழ்ந்து, விவசாயப் பணிகளையும் செய்துள்ளதும் ஆடு, மாடுகளை வளர்த்துள்ளதும் தெரிய வந்துள்ளது. நாய் அல்லது நரியின் மேல்தாடை எலும்பும் இங்குக் கிடைத்துள்ளது. ஆய்வின் மூலம் அது நாயின் எலும்பாக உறுதி செய்யப்பட்டால், புதிய கற்காலத்தில் மனிதர்களுடன் நாய்களும் இணக்கமாக இருந்துள்ளது உறுதி செய்ய முடியும். இந்த இடத்தில் புதிய கற்காலம் தொடங்கி சங்க காலம் வரையிலான பானை ஓடுகளும் கிடைப்பது இந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, குடியாத்தம் பகுதி பொதுமக்கள், “கி.மு நான்காயிரம் முதல் கி.மு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, கீழடி அகழாய்வை விடவும் பழைமையான நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இங்குத் தொடர்ந்து கிடைத்து வருவதால், மத்திய - மாநில அரசுகள் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் பழங்கால பண்டைய நாகரிக நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும்” என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.