வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கணேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முடிக்காமல் வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. உண்மையிலேயே வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எண்ணம் இருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்திற்காகச் சட்டம் இயற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.