அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளை கேட்பதால், தொகுதி பங்கீடு தொடர்பான இன்றைய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக தொகுதிகளை பாஜக கேட்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக மற்றும் பாஜக பிரதிநிதிகள் இடையே மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பா.ஜ.க சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
30 தொகுதிகளுக்கும் அதிகமாக பாஜக கோருவதாகவும், ஆனால் 15 முதல் 18 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
இதனிடையே தேமுதிகவுடன் அதிமுக தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.