திருவாரூர் அருகே மது போதையில், பெற்ற மகனை தந்தையே தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்கி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த காயத்திரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ராம்கி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதை மட்டுமே முழு நேர வேலையாக செய்து வந்துள்ளார். இதனால் ராம்கிக்கும் அவரது மனைவி காயத்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், காலை குடித்துவிட்டு வந்தவர், வழக்கம் போல தகராறில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனையடுத்து, அருகில் உறங்கி கொண்டிருந்த மூத்த மகன் சாய்சரன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிய ராம்கி தீயிட்டு கொளுத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு பதறிய போன அக்கம்பக்கத்தினர் சாய் சரணை மீட்டு, நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மனைவி காயத்திரி அளித்த புகாரின் பேரில் ராம்கியை, கைது செய்த நன்னிலம் காவல் துறையினர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சாய் சரணுக்கு தொடந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
மது போதையில், பெற்ற மகனை தந்தையே தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.