சாயல்குடி அருகே செக்கு மாடு வைத்து இயற்கை முறையில் எண்ணை ஆட்டிய உரல்கள் தற்போது பனைக்காடுகளுக்குள் கேட்பாரின்றி கிடப்பது சமூக ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாக்கு ருசி காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் தமிழக மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை கை விட்டு பிட்சா, பர்கர் , ஃப்ரைட் ரைஸ், கபாப் என்று அயல்நாட்டு உணவு பழக்க வழக்கங்களுக்கு மாறி விட்டோம். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் சகட்டு மேனிக்கு வெட்டித் தள்ளுகிறோம். இதனால், உடல் பருமன் நோய் ,சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இளம் பருவத்திலேயே வரத் தொடங்கி விட்டன. இதனால், பழங்காலத்தில் மக்கள் எண்ணெய் முதற் கொண்டு பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்து கொண்டனர். அப்படி, எண்ணெய் உற்பத்தி செய்வதற்கென்றே தமிழகத்தில் செக்கடித் தெரு என்ற பெயரில் தெருக்கள் இருந்தன.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சுற்று வட்டார பகுதியில் காலம் காலமாக செக்கு மாடுகள் மூலம் எண்ணெய் வித்துக்கள் அரைக்கப்பட்டு வந்தன. மாடு பூட்டி கல்செக்கு ஆட்டும் தொழில் செய்பவர்கள் வசிக்கும் தெருக்கள் செக்கடித்தெரு என்றே அழைக்கப்பட்டன. ஆனால், தற்போது செக்காட்டும் தொழிலும் இல்லை. செக்கடித் தெருவும் இல்லை. நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த கல்செக்குகள் கேட்பாரற்று தூக்கி வீசப்பட்டு கிடக்கின்றன. இந்த உரல்கள் கற்பாறைகளால் உருவாக்கப்பட்டவை. சுமார் 6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமானவை. இவற்றில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளித்தது என்றால் அது மிகையில்லை. இயற்கை முறையில் எண்ணை தயாரிக்கும் தொழிலை மீட்டெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, செக்காட்டும் தொழில் செய்து வந்தவர் கூறுகையில், மூன்று ஜோடி மரம் மற்றும் கல் செக்கு வைத்து தொழில் செய்து வந்தோம். எள், கருப்பட்டி, முருங்கை மரத்தில் வழியும் பசை ஆகியவற்றை சேர்த்து அரைத்தால் துய்மையான நல்லெண்ணைய் கிடைக்கும். நிலக்கடலை, தேங்காய் உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பழைய தொழில்நுட்பத்தில் அரைத்து எடுத்தோம். இதில் , மிஞ்சும் எண்ணையுடன் கூடிய புண்ணாக்கு கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகவும் பயன்பட்டது. இப்படி எடுக்கப்படும் எண்ணையில் அதிகப்படியான உயிரச்சத்துக்கள் நிறைந்திருந்தன. தற்போது , அதுபோன்ற தீவணங்கள் கால்நடைகளுக்கு கிடைப்பதில்லை. காலமாற்றத்தின் காரணமாக அறிவியல் வளர்ச்சியால், வேறு தொழிலுக்கு மாறிவிட்டேன். என்றாலும் என்னுடைய பாராம்பரிய தொழிலை மீட்டெடுக்க அரசின் ஆதரவு தேவை. எனவே,நலிவடைந்த இந்த தொழிலை மீட்டெடுக்க பொதுமக்களிடையே உணவுப்பழக்கமுறைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.