காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்திக்குத் தற்போது 50 வயதாகிறது. இந்த வயதிலும் கடலில் சில நிமிடங்கள் நீந்தி தன் பிட்னெஸ்ஸை நிரூபித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதி எம்.பியாக இருக்கிறார். தற்போது, 50 வயதாகும் ராகுல்காந்தி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், ஆளை பார்த்தால் நிச்சயம் 50 வயது மனிதர் மாதிரி தெரியாது. வயிற்றில் தொப்பை இல்லாமல் சூப்பர் பிட்னெஸ்ஸாக இருக்கிறார். ஜீன்ஸ், டீ சர்ட் போட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் அவரின் வழக்கம். தினமும் 12 கிலோ மீட்டர் ஜாக்கிங் செல்வது ராகுல் காந்தியின் பழக்கம். உடற்பயிற்சிகளுடன் தியானம், யோகா செய்வதும் அவரின் பிட்னெஸ் ரகசியமாகும்.
இந்த நிலையில், கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, கடலுக்குள் ஒரு அட்வென்ச்சர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். தன் பயண திட்டத்தை ரகசியமாகவும் வைத்திருந்தார். இதற்காக, கொல்லம் சென்ற அவர் தேசிய பாதுகாப்பு படையினரிடம் கூட தகவல் சொல்லவில்லை. இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளை மட்டும் தன்னுடன் அழைத்து கொண்டு நேற்று அதிகாலை 5.15 மணிக்கு ரகசியமாக கொல்லம் துறைமுகத்துக்கு சென்றார் ராகுல் காந்தி.
தொடர்ந்து, படகில் கடலுக்குள் பயணித்த ராகுல் காந்தி மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்தார். ஆனால், அவரின் போதாத காலம் ஒரே ஒரு கனவாய் மீனும் 4 மத்தி மீன்களும்தான் வலையில் கிடைத்தன. பின்னர், மீனவர் ஒருவர் கடலுக்குள் குதிக்க, ராகுல் என்ன நினைத்தாரோ தெரியவில்லை... திடீரென்று அவரும் கடலில் குதித்து உற்சாகமாக நீந்தத் தொடங்கினார். ராகுல் கடலுக்குள் குதித்ததை பார்த்த உடனிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் பிரதாபன் பதறிப் போனார். ஆனால் ராகுலின் தனி பாதுகாப்பு அதிகாரியான அலங்கார் சாமியோ,' ராகுல் காந்தி தேர்ந்த ஸ்விம்மர். நீங்கள் கவலைப் படாதீங்க' என்று பிரதாபனை அமைதிப் படுத்தினார்.
குளம், ஆறுகளில் நீந்துவது போல, கடலில் நீந்திவிட முடியாது. எழும் அலைகளை சமாளித்து லாவகமாக நீந்த வேண்டும். பல சமயங்களில் மீனவர்களே கடலில் மூழ்கி விடுவது உண்டு. ஆனால், ராகுல்காந்தி தேர்ந்த நீச்சல் வீரர் போல கடலில் நீந்தியது மீனவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.கடலுக்குள் நடக்கும் விஷயங்களை ராகுலுடன் இருந்த இரு போலீஸ் அதிகாரிகளும் கொல்லம் கமிஷனர் டி. நாராயணனுக்கு வயர்லெஸ்ஸில் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ராகுல் கடலுக்குள் நீச்சல் அடிக்கும் தகவலைக் கேட்ட டி. நாராயணன் பயந்து போனார்.
உடனடியாக கமிஷனர் நாராயணன் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்க அவர்களும் படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கடலில் 10 நிமிடங்கள் நீந்திய ராகுல் காந்தி பின்னர், படகில் ஏறினார். ஏற்கனவே , படகில் சமைத்துத் தயாராக இருந்த டுனா மீன் குழம்பை மீனவர்கள் அவருக்கு பரிமாறினர். ரொட்டியுடன் சேர்த்து டுனா மீன் குழம்பை ராகுல்காந்தி ருசித்து சாப்பிட்டார். தொடர்ந்து, மீனவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். கடலுக்குள் இரண்டரை மணி நேரம் இருந்த ராகுல் காந்தி புது உற்சாகத்துடன் கரை திரும்பினார்.