சென்னையில் 57 சதவீத பேருந்துகள் இயக்கம். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் முழு அளவிலும், விருதுநகர் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
சென்னையில் அதிகாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி 57 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்குகின்றன. கிராமப்புறங்களுக்கும் வழக்கம் போல் அனைத்து பேருந்துகளும் எவ்வித தடையும் இன்றி செல்கின்றன. தற்போது அங்கு 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து எப்போதும் போல பேருந்துகள் சென்று வருகின்றன.
கோவையில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போதய நிலையில் அங்கு 40 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் 25 விழுக்காடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூர், திருச்சி, மற்றும் தொலை தூரம் செல்லும் பேருந்துகள் ஓடவில்லை.
கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கரூர் - 1, கரூர் - 2, அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி உள்ளிட்ட 5 பணி மனைகளில் இருந்து தற்போது வரை 85 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், திங்கள்நகர் பணிமனையில் இருந்து 50 விழுக்காடு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் கூட்டமின்றி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து தனியார் பேருந்துகளும், 60 விழுக்காடு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளிலும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடலூரில் இருந்து ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. பணிமனை முன்பு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.