ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்க கோரி தொடர்ந்து 3வது நாளாக மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் இரவு நேரத்தை ஆடல், பாடலுடன் செலவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போராட்டத்தை தொடர்ந்து, அண்மை காலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் ஆடல், பாடல், விளையாட்டு என கலகலப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. தீவிர போராட்டத்தில் பிறரை மகிழ்விப்பதற்காக போராட்டக்களத்தில் இருப்பவர்களே நடனம் ஆடுவதும், விளையாட்டுகளை முன்னெடுப்பதும், இசைப்பதும் வழக்கமாகி வருகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் ஆடலும், பாடலும்,கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இதேபோன்ற ஒரு சம்பவம் தான் கரூரிலும் நடந்துள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், அகவிலைப்படியை உயர்த்த வலியுறுத்தியும், ஓய்வூதியம், ஊதிய உயர்வு மற்றும் பணிக்கொடை வழங்க கேட்டும் தமிழகம் முழுவதிலும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமை அலுவலகத்தின் எதிரே உள்ள சாலையில் முகாமிட்ட அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவில் சாலையில் தங்கிய அங்கன்வாடி பணியாளர்கள் பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடி தங்களை தாங்களே மகிழ்வித்துக் கொண்டனர். நடனம் ஆடும் பெண்களை பிறர் உற்சாகப்படுத்த, அன்றிரவு ஆடல் - பாடலுடன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கழிந்தது.