முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இன்று 73வது பிறந்தநாள். அரசியலில் இரும்புப்பெண்மணியாகத் திகழ்ந்த அவரை நினைவுகூரும் செய்தித் தொகுப்பு.
தமிழகத்தின் முதலமைச்சர், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தவர்...! லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மா என்று அழைத்த சொல்லுக்கு சொந்தக்காரர்...
அவர்தான் ஜெயலலிதா...
இளம் பருவத்திலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை முறைப்படி பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. வெண்ணிற ஆடை படத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய், தனிப்பிறவி, முகராசி, காவல்காரன் என எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து 28 படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன.
சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடனும், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் பிற மொழிகளிலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், பரதநாட்டியத்தை முறையாகக் கற்றறிந்தவர். 13 ஆண்டுகளில் 127 படங்களில் நடித்துள்ளார் ஜெயலலிதா.
1980ல் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர், கொள்கை பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை ஏற்று செயலாற்றினார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்த அ.தி.மு.க.வை, தமது முயற்சியால் இணைத்த ஜெயலலிதா, 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தலில்களில் வெற்றிபெறச் செய்து முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
ஜெயலலிதா ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேகரிப்பு, ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திட்டங்கள் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்கள் இந்தத் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளன.
தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி வந்தனர். நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து, தமிழகத்தின் குரலை ஒலிக்கச் செய்தார்.
ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை... இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்றவர் அவர். துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராக வளர்ந்து, அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை தமது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா.