பெரம்பலூர் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 16 பவுன் தங்க நகை, 50 ஆயிரம் ரொக்கம், எல்இடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கிராமத்திலுள்ள தங்கராசு பட்டினத்தில் செங்குட்டவன் என்பவரின் மனைவி நவநீத பானு(46) தனியாக உள்ள வீட்டில் வசித்து வருகிறார் , ஆடுதுறை அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து நவநீதபானுவுக்கு நித்தீஷ்(18), தினேஷ்(18) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் தனது இரு மகன்களுடன் திங்களன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் 25 வயது மதிக்க தக்க முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து கதவை உடைத்து வீட்டினுள் புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்த மூவரையும் கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் 15 பவுன் தங்க நகை, ஒரு எல்இ டிவியையும் திருடிக்கொண்டு வெளியேறினர்.
இதேபோல் காட்டு கொட்டகை பகுதியில் தங்கி விவசாயம் செய்து வரும் மருதமுத்து மகன் வீரபத்திரன்(55), வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்தபோது அவரை கட்டிப்போட்டு விட்டு, கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து அவர் மனைவி லட்சுமியை(38) கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறித்துக் கொண்டு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
இதனிடையே நகை மற்றும் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி திருடர்கள், உள்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவை இரும்பு கம்பிகளை கொண்டு உடைத்து உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடியதோடு, வீட்டில் இருந்த பெண்களிடம் தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டினுள் உள்ள அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு திருட்டு சம்பவம் நிகழ்த்திய வீடுகளின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நிகழ்ந்த இரண்டு வீடுகளிலும் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று கதவைத்திறந்துவிட்ட அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்திற்கு அளித்த தகலின் பேரில், மங்களமேடு போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரம்பலூர், துறைமங்கலம், வேப்பந்தட்டை, அரும்பாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் தொடர் திருட்டு சம்பவம் பொதுமக்களை பெரும் பீதி அடைய செய்துள்ளது. திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதோடு, பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் குற்றவாளிகளை காவல்துறை கவனத்தில் கொண்டு விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.