மனித சமூகத்திற்கு முன் எப்போதும் இழிவாகவே பார்க்கப்படும் விலங்கினங்களுள் ஒன்று கழுதை. இன்று அதன் ருசிமிக்க இறைச்சிக்காக கழுதை இனமே அழிந்து போகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது வேதனையளிக்க கூடிய விஷயமாகும். சமீப காலமாக ஆந்திராவில் கழுதைகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் கழுதை இறைச்சி மீதான மோகம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் கழுதை படுகொலை வழக்குகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய கணக்கிடுப்பின் படி ஆந்திராவில் தற்போது வெறும் 5000 கழுதைகள் மட்டுமே உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, குண்டூர் மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் கழுதை படுகொலை வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கழுதை இறைச்சியை உண்டால், வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கழுதை இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆந்திராவில் கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சட்டவிரோத கும்பல்கள் மூலம் கழுதைகள் இறைச்சிக்காக கொல்லப்படுகிறது. ஆந்திராவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து தற்போது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் இருந்து கழுதைகள் இறைச்சிக்காக சட்டவிரோதமாக கொல்லப்பட்டு வருகிறது.
இப்படி இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு வரும் கழுதை, இந்திய சட்டத்தின் உணவு விலங்காக கருதப்படுவதில்லை. இறைச்சிக்காக கழுதை படுகொலை செய்யப்படுவது இறைச்சிக் கூட விதிகள் 2001ன் படி தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் கழுதையை சட்டவிரோதமாக கொல்பவர்கள் விலங்குகள் வதை தடுப்புச் சட்டப்பிரிவு 428 மற்றும் 429 பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சகிப்புத் தன்மைக்கு பெயர்போன கழுதை இனம், இன்று மனிதனின் ருசிக்காக சந்ததியே இல்லாமல் போகும் நிலைக்கு வந்தது துரதிர்ஷ்டமாகும். இதனை விரைந்து தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.