கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா. இவர் பெண்ணாடம் அருகே உள்ள இறையூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறர். அதே பகுதியில் வசித்து வரும் பிரவீன்குமார், ஜெயசூர்யாவின் நெருங்கிய நண்பர். அவரும் ஜெயசூர்யா படிக்கும் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெயசூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரவீன்குமார் உட்பட அவர் நண்பர்கள் அனைவரும், ஜெயசூர்யாவிற்கு கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்திருந்தனர். செங்கமேட்டில் கொண்டாட்டங்கள் முடிந்ததும், நண்பர் ஒருவரை பெண்ணாடத்தில் உள்ள அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக , ஜெயசூர்யா, பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, செங்கமேடு திரும்பும் வழியில், ஜெயசூர்யா, பிரவீன்குமார் சென்ற இரு சக்கர வாகனம்,கூடலூர் அருகே எதிர்பாராத விதமாக எதிரில் வந்த டிப்பர் லாரியின் மேல் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பிரவீன்குமாரை மீட்டுத் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமாரும் இறந்தார். விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் விபத்தில் இறந்ததால் செங்கமேடு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மாணவர்களின் பெற்றோர்களும் நண்பர்களும் கதறி அழும் காட்டிச்சியை கண்டு ஊர் மக்கள் அனைவரும் கண் கலங்கி நிற்கின்றனர்