குழந்தைகளுக்காக தான் சாப்பிடாமல் பட்டினி கிடந்த தாய், இப்போது விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு பேராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின்,குழந்தைகளும் பரிதாபமாக தவித்து வருகின்றன.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரை சேர்ந்தவர் வீராசாமி- உஷா தம்பதி. இவர்களுக்கு பாலா, அன்பு என்ற இரு ஆண் குழந்தைகளும் தரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். வீட்டு வேலை செய்து தன் குழந்தைகளை உஷா காப்பாற்றி வந்தார். இதற்கிடையே, கொரோனா லாக்டவுன் காரணமாக பல வீடுகளில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், குழந்தைகளுடன் பட்டினி கிடந்துள்ளார். கிடைத்த உணவை குழந்தைகளுக்கு மட்டும் கொடுத்து விட்டு உஷா பட்டினியாகவே இருந்துள்ளார் . பல வேளையில் தண்ணீர்தான் அவருக்கு சாப்பாடாக இருந்து வந்துள்ளது. இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருந்துள்ளார். குழந்தைகளும் செய்வதறியாது திகைத்துள்ளன.
எலும்பும் தோளுமான மெலிந்த நிலையில் உஷா இருந்துள்ளார். குழந்தைகளும் செய்வதறியாது திகைத்துள்ளன. உஷாவின் நிலையை கண்டு வருந்திய அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பக் ருதீன், பிரபு உள்ளிட்ட இளைஞர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குளுக்கோஸ் செலுத்தப்பட்டாலும் உஷாவின் உடல் பழைய நிலைக்கு திரும்பவில்லை. திட உணவு சாப்பிட முடியாமல் திணறி வருகிறார். சிறிதளவு பால் மட்டுமே அவரால் எடுத்துக் கொள்ள முடிகிறது. உறவினர்கள் யாரும் ஆதரவளிக்க முன் வரவில்லை. இதனால், உஷாவின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் யாரும் இல்லை. தாயின் படுக்கையருகே அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த குழந்தைகளை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. பல நாள்களாக உஷா பட்டினியாக இருந்ததால் அவரின் உணவு குழாய் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு கிசிச்சையளித்து வருகின்றனர். இதுவரை, யாரும் உஷாவை தேடி வரவில்லை. தன்னார்வலர்கள் சிலர்தான் அவருக்கு உதவி வருகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உஷாவின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவருக்கு உதவ முன் வர வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.