காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். அங்குள்ள எதிர்க்கட்சிகளும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த விடக்கூடாது என ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மழைக்காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாகும் உபரிநீர் மூலம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநில நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு கர்நாடகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காவிரியின் உபரிநீரை எக்காரணம் கொண்டும் தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ள எடியூரப்பா, வெறும் அறிக்கைகள் கொடுப்பதால் பயனில்லை என்பதால், தமிழகத்தின் திட்டத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். காவிரி பாசனப் பகுதியில் எந்த திட்டம் செயல்படுத்த வேண்டுமானாலும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை தமிழக அரசு மீறியிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசிடமும் காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முறைப்படி ஆட்சேபம் எழுப்பப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசின் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காவிரி நீரை தமிழகம் சட்டவிரோதமாகப் பயன்படுத்த முயற்சி செய்வதாகவும், அதை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று கூறியுள்ளார். காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி அளிப்பதாகவும், கர்நாடகத்திற்கு எதிராக அநீதி இழைப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் கர்நாட முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.