ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயிலில், கருவறையில் பூஜை செய்வதற்கு, காஞ்சி மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, விஜயேந்திரர் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டார்...
ராமேஸ்வரம், ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்வதற்காக, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ராமேஸ்வரம் வந்திருந்தார். திங்கள் கிழமையன்று சாமி தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம், ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வந்த விஜேயந்திரருக்கு அதிகாரிகள் மற்றும் கோயில் தக்கார் ராமநாதபுரம் ராஜா கோயில் வாசலில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், அவர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி கருவறைக்குள் சென்று வழிபட்டார். அதன் பிறகு, சுவாமி சன்னதி கருவறைக்குள் செல்ல முயன்ற சங்கராச்சாரியாரை கோயில் அர்ச்சகர்கள் தடுத்து நிறுத்தி, ’கருவறைக்குள் சென்று மூலவரைத் தொட்டு பூஜை செய்யக் கூடாது’ என்றனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் மூலவர் கருவறையில் மராட்டிய புரோகிதர்கள் மட்டுமே பூஜை செய்து வருகிறார்கள். அவர்களைத் தவிர்த்து சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்றவர்களை கருவறைக்குள் அனுமதிக்க முடியாது என்று மராட்டிய புரோகிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கோயில் அர்ச்சகர்களுக்கும் விஜயேந்திரர் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே விஜயேந்திரரை பூஜை செய்ய விடாமல் தடுத்த குருக்கள், அர்ச்சகர்களைக் கண்டித்து கோயில் முன்பு குவிந்த விஜயேந்திரர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, சாமி தரிசனம் செய்ய வந்திருந்த அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சங்கராச்சாரியாருக்கு பூஜை செய்ய அனுமதி பெற்றனர். கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டதையடுத்து காஞ்சி விஜயேந்திரர், தான் கொண்டுவந்திருந்த கங்கை நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்து, சிறப்புத் தீபாராதனை செய்தார். இதைப் பொதுமக்கள் யாரும் பார்க்கக்கூடாது என்று அர்ச்சகர்கள் திரைபோட்டு மூடினர். கோயில் நிர்வாகம் எச்சரித்த பிறகு பொதுமக்களும் அதைக் காண அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு, ராமேஸ்வரம் கோயிலுக்குத் தங்கக்காசு மாலை, தங்கச்சங்கிலி, வில்வமாலை மற்றும் 11 வெள்ளிக் குடங்கள், 2 வெள்ளி வாளி, தீப ஆரத்தி பொருட்களை வழங்கிய விஜயேந்திரர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் ராமேஸ்வரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.