தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் ப்ரீபயர் விளையாட தாயின் ஸ்மார்ட் போன் கிடைக்காத விரக்தியில், 6 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ப்ரீ பயர் அரக்கனுக்கு 2 வது பலி நிகழ்ந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிமுருகன், கூலித்தொழிலாளியான இவருக்கு 16 வயதில் மதன் , 13 வயதில் பாலகுரு ஆகிய இரு மகன்கள் இருந்தனர். இதில் இளையவன் பாலகுரு தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
மதன் மற்றும் பாலகுரு இருவரும் ஆன்லைன் வகுப்புகளை தாயின் செல்போனில் படித்து வந்த நிலையில் அதன் மூலமாக பப்ஜி விளையாட்டுக்கும் அது தடை செய்யப்பட்ட பின்னர் ப்ரீ பயர் விளையாட்டுக்கும் அடிமையாகி உள்ளனர். இதனால் செல்போனுக்கு சண்டை இடுவதையும் வழக்கமாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் ஜோதிமணி மகன்கள் இருவருக்கும் விளையாடுவதற்காக செல்போனை கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தந்தை சீனிமுருகன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அண்ணன் மதன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டதால், தனக்கு செல்போன் விளையாட கிடைக்கும் அதில் ப்ரீ பயர் விளையாடலாம் என்று பாலகுரு நினைத்துள்ளான். ஆனால் தாய் ஜோதிமணி வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், பாலகுரு அடம்பிடித்தும் செல்போனை கொடுக்காமல் கையோடு எடுத்துச் சென்று விட்டார்
செல்போன் கிடைக்காத ஏக்கத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பாலகுரு மனம்உடைந்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கயிற்றால் தூக்கிட்டு விபரீத தற்கொலை முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
வெளியூரில் இருந்து வீடு திரும்பிய தாய் ஜோதி மணி தன் மகன் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த விளாத்திகுளம் போலீசார் பாலகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுவன் பாலகுருவின் உயிரிழப்பு, தமிழகத்தில் ப்ரீ பயர் விளையாட்டுக்காக பலியான 2 வது உயிராகும், இந்தியன் ஆப் என்ற ஒற்றை வார்த்தையால் சிறுவர்களை மூளைச் சலவை செய்து மாதம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டுகின்றனர் ப்ரீ பயர் விளையாட்டு செயலியை நிர்வகிக்கும் குழுவினர்.
ஆன் லைன் கல்விக்காக பெற்ற ஸ்மார்ட் போன் வாயிலாக அழையா விருந்தாளியாக மாணவர்களின் மனதிற்குள் நுழைந்து கொடிய வைரஸ் போல பொன்னான நேரத்தோடு அவர்களது வாழ்க்கையையும் வீணடித்துக் கொண்டிருப்பது தான் சோகம்
செல்போன் பயன்படுத்தும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் கவனிக்கத் தவறினால் என்ன மாதிரியான மனச் சிதைவுக்கு ஆளாவார்கள் என்பதற்கு இந்த சோகச்சம்பவம் மற்றும் ஒரு சாட்சி..!