செங்கல்பட்டு அருகே எத்தனால் கலந்த பெட்ரோல் போடப்பட்ட வாகனங்கள் நடுவழியிலேயே நின்றதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் ’தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பதாக’ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு பிரச்னையாக வந்துள்ளது எத்தனால் கலப்பு. சுற்றுச் சூழலைக் காக்கும் முயற்சியாக பெட்ரோலுடன் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இந்த உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன.
எத்தனால் கலந்த பெட்ரோல் போடும்போது, பெட்ரோல் டேங்கில் சிறிதளவு தண்ணீர் சென்றாலும் அது 10 சதவிகித எத்தனாலை தண்ணீராக மாற்றிவிடும் என்பதால், வாகனங்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும் என்று பெட்ரோலியத்துறை சார்பில் பொதுமக்களுக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த சூழலில் தான், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோலிய பங்கில் ஒருவர் தன் காருக்கு 1000 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும் உடனே கார் நின்று விட்டது. இதைப் போலவே வேறொருவரின் வாகனமும் நடுவழியில் நின்றது. இது குறித்து, கார் ஓட்டுநர் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்ட போது முறையான பதில் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகியிடம் கேட்டபோது, “தற்போது வரும் பெட்ரோல்களில் எத்தனால் கலந்து வருவதால் வாகனத்தைக் கழுவும் போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் படாமல் கழுவ வேண்டும் எனவும், அப்படித் தவறுதலாக தண்ணீர் பட்டால் இதுபோன்று வாகனங்கள் பாதி வழியிலேயே நின்று விடும்” என்றும் கூறினார். மேலும், தங்களிடம் உள்ள பெட்ரோலை பரிசோதனை செய்து விட்டதாகவும், அதில் தண்ணீர் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்ததையடுத்து, பெட்ரோலியத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மறு உத்தரவு அறிவிக்கும் வரை இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது..!