கோவை மேட்டுபாளையம் யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையை கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய பாகன்கள்
தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம், கடந்த 8-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
48 நாட்கள் நடக்கும் இம்முகாமில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை போக்கி புத்துணர்வு அளிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெய்மால்யதாவை இரு பாகன்கள் சேர்ந்து அடித்து துன்புறுத்தும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
வலி தாங்காமல் யானை பிளிறித் துடிக்கும் காட்சி காண்போரை கலங்கவைத்துள்ள நிலையில், இது யானைகள் புத்துணர்வு முகாமா ? வதை முகாமா? என விலங்கு நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முகாம்களுக்கு பின்புறம் உள்ள ஆற்றுப்படுகையில் யானைகளுக்கு இதுபோன்ற கொடுமை ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருவதாகவும், இம்முறை வீடியோ மூலம் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சம்மந்தபட்ட பாகன்கள் மீது விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, யானைகள் முகாம்களில் நடக்கும் இது போன்ற விதிமீறல்களை தடுக்க உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அதிகாரியும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 பாகன்களையும், வனத்துறையினர் கைது செய்து, கோவில் யானையை சித்திரவதை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.