மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மகனுக்கு பிறந்தது பெண் குழந்தை என்பதால், பெண் சிசுவை தலையனையால் அமுக்கி கொலை செய்த தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 56 வருடங்களுக்கு முன்பு கள்ளிப்பாலுக்கு தப்பிய மூதாட்டி, தற்போது கொலைவழக்கில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த பாறைப்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி - சிவபிரியங்கா தம்பதிக்கு கடந்த 10 ந்தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 16 ந்தேதி தங்கள் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்தனர் இந்த தம்பதியர்.
அந்த பெண் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். குழந்தையின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால் பெண் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உத்தப்ப நாயக்கனூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் குழந்தையின் முகத்தில் அழுத்தத்தை கொடுத்து கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ‘கருத்தம்மா’ சொன்ன கருத்தை கேட்டுக் கூட திருந்தாத ஜென்மங்களால் நடந்த பெண் சிசுக்கொலை வெளிச்சத்திற்கு வந்தது. சின்னச்சாமி - சிவபிரியங்கா தம்பதிக்கு ஏற்கனவே 8 வயது மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தை இருந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் 3 வது முறை கர்ப்பம் தரித்த சிவபிடியங்காவிற்கு 3 வதும் பெண் குழந்தையாக பிறந்த தகவல் கேட்டு சின்னச்சாமியின் தாய் நாகம்மாள் திட்டித்தீர்த்துள்ளார். அதோடில்லாமல் குழந்தையை எங்காவது தூக்கி போட்டு விட்டு வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் சிவபிரியங்கா தன் பெண் சிசுவை கையோடு புகுந்த வீட்டிற்கு எடுத்துச்சென்ற நிலையில் சம்பவத்தன்று சின்னஞ்சிறு சிசுவை, பெண் குழந்தை என்ற ஒற்றை காரணத்துக்காக, தாய் கிழவி நாகம்மாளும், கல் நெஞ்சம் கொண்ட சின்னசாமியும் சேர்ந்து தலையனையை வைத்து முகத்தில் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது.
56 வருடங்களுக்கு முன்பு தாய் கிழவி நாகம்மாளின் பெற்றோரும் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று அவரை கள்ளிப்பலுக்கு இறையாக்கி இருந்தால் இப்படி ஒரு சம்பவத்தை நாகம்மாள் நிகழ்த்தி இருக்க முடியாது என்று ஆதங்கப்படும் சமூக ஆர்வலர்கள், பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைப்பவர் அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் தங்கள் குழந்தைகளை முறைப்படி ஒப்படைக்கலாம் என்றும் அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கும் முழுப்பொறுப்பையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
பெண் குழந்தைகளை தங்கள் குலதெய்வமாக போற்றி வளர்க்கின்ற சமூக கட்டமைப்பு உள்ள இதே தமிழகத்தில் தான் இப்படிப்பட்ட பெண் சிசுக்கொலைகளும் வயது முதிர்ந்த பெண்களால் அரங்கேறுவது நம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமான தலைகுணிவாக பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில் பெண் குழந்தையின் பெருமையை போற்றும் கருத்தம்மா போல ஆயிரம் படங்கள் வந்ததாலும் நாகம்மாள் போன்ற தாய்கிழவிகளை எல்லாம் திருத்த இயலாது என்பதற்கு இந்த சம்பவமே வேதனையான சாட்சி..!