அருகே வயலில் கட்டிய குருவியின் கூட்டை கலைக்காமல் மற்ற பகுதியில் அறுவடை செய்த விவசாயிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன், சிவகங்கை மாவட்டத்திலுள்ள பொத்தகுடி கிராமத்தில் மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வந்தது. தெருவிளக்குகள் எரிய வைக்கும் மொத்த கன்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டிய மின் இணைப்பு பெட்டியில் இருந்தது, இதனால், சுவிட்சை ஆன் செய்ய முடியாத நிலையில், 30 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரிய விடாமல் மக்கள் இருளில் வாழ்ந்தனர். குருவிக்குஞ்சுக்காக கிராம மக்கள் இருளில் கிடந்தது பெரிதாக பேசப்பட்டது. தற்போது, அதே போல ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள சாத்தனுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், தன் 3 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். நெற் கதிர்கள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாரானது. அறுவடை இயந்திரங்களையும் ரங்கநாதன் வரவழைத்திருந்தார். நெற் கதிர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்களில் குருவி ஒன்று கூடு கட்டியிருப்பதை பார்த்தார்.
இதையடுத்து , குருவி கூட்டை கலைக்க விரும்பாத விவசாயி ரங்கநாதன், மற்ற இடங்களில் மட்டும் பயிர்களை அறுவடை செய்தார். பின்னர், குருவி கூடு இருந்த இடத்தை சுற்றிலும் கம்புகள் கட்டி நெற்கதிர்கள் கீழே விழுந்து விடாமல் இருக்கும் வகையில் தடுப்பு அமைத்துள்ளார். குருவி கூடு கலைத்து விடாமல் அறுவடை செய்த விவசாயி ரங்கநாதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும் என்பதும் கிராம மக்களின் நம்பிக்கையாகும்.