சங்கரன்கோவில் அருகே பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கலை கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி முதல்வரை தாக்கி ஓடவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி தாளாளரின் இரு மனைவிகளுக்கு இடையேயான பாகப்பிரிவினையால் நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சங்கரன் கோவில் அடுத்த மேலநீலித நல்லூர் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் நிறுவனர் தனது இரு மனைவிகள் என்று கூறப்படுகின்றது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மனைவிக்கு கலை அறிவியல் கல்லூரியையும், தமிழகத்தை சேர்ந்த மனைவிக்கு நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியையும் பாகபிரிவினையாக எழுதிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
கேரளப்பெண் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில் அங்கு பெருவாரியாக படிக்கின்ற குறிப்பிட்ட சாதி மாணவர்கள் மீது ஒடுக்குமுறையை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சிவக்குமார் என்ற பேராசிரியரை நிர்வாக காரணம் என்று கூறி பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகின்றது. சிவக்குமாருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் கல்லூரி முதல்வர் ஹரிகங்காவை கண்டித்து கோசமிட்டனர். அப்போது மாணவன் ஒருவனை அடிக்க பாய்ந்த முதல்வர் ஹரிகங்காவை எதிர் தாக்குதல் நடத்திய சில மாணவர்கள் அவரை கல்லூரிக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்
தொடர்ந்து முதல்வர் ஹரி கங்காவை பிடித்து இழுத்து ரகளை செய்த மாணவர்கள் அத்துமீறிய நிலையில், பிடித்து தள்ள , ஒரு மாணவர் இரக்கப்பட்டு கல்லூரி முதல்வரை காப்பாற்றி விட்டார்
விட்டால் போதும் என்று ஓடிய கல்லூரி முதல்வர் ஹரிகங்கா மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்து விட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரியின் நிறுவனத்தலைவரின் மனைவிகளுக்கிடையேயான பாகப்பிரிவினை தகராறு மற்றும் மாணவர்களின் போராட்டக்குணத்தால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து கல்லூரி திறந்த ஒரு வாரத்தில் கல்லூரிக்கு மீண்டும் காலவறையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வரை தாக்கிய சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
அதே நேரத்தில் ஒரு சில மாணவர்களின் அடாவடி செயல்கள் ஒட்டு மொத்த மாணவர்களையும் பாதிப்படைய செய்து விடுகின்றது. படிக்கின்ற மாணவர்கள் சாதிகளை கடந்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!