ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் பல்வேறு குற்ற சம்பவம் நடக்கக்கூடிய பிளாக் ஸ்பாட் பகுதி இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் அறியா பருவத்தின் போது செய்யும் தவறுகளை திருத்தி, அவர்களுக்கு தேவையான நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால், அவர்களே தங்களை தயார் செய்து கொள்வார்கள் என்பதற்கு உதாரணமாக, சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு மேற்கொண்ட நடவடிக்கைகளை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியானது, காவல் துறையினரால் முழுவதுமாக கண்காணிக்க கூடிய வகையில் பிளாக் ஸ்பாட் பகுதியாக இருந்து வந்தது. இந்த பகுதியை சேர்ந்த ஒருசில இளைஞர்கள், அறியா பருவத்தின் போது செய்யும் தவறுகளினால் அவர்களது வாழ்க்கை திசை மாறியது. இதுகுறித்து கேள்விப்பட்ட சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு, தினம்தோறும் நமச்சிவாயபுரத்திற்கு சென்று, பொதுமக்களை சந்தித்து வந்தார். திசை மாறிய இளைஞர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்தக் கூடிய யோகா, உடற்பயிற்சி, நூலகம், இசை, விளையாட்டு ஆகியவற்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்தார். இதன்மூலம் வளரும் பருவத்திலேயே தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் பல நல்ல தலைமுறைகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட முடியும் என்பதை உணர்ந்திருந்தார்.
இதற்காக நமச்சிவாயபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை பெற்று, தனது நட்பு வட்டாரம், பொது பங்களிப்பு உதவியுடன் உடலையும், மனதையும் உறுதியாக வைத்து கொள்ள உடற்பயிற்சி கூடம், யோகா, அறிவுத்திறனை வளர்த்து கொள்ள கல்வி, உளவியல், வரலாற்று பதிவுகள், பாட புத்தகங்கள், பொது அறிவு, இசை போன்றவற்றை உள்ளடக்கிய பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமான நூலகம் ஆகியவற்றை அமைத்துள்ளார் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு.
என்னதான் வேலை பளு இருந்தாலும் தான் ஏற்படுத்தி கொடுத்த நூலகத்துக்கு வரும் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு சிறுவர், சிறுமிகளுடன் அமர்ந்து புத்தகத்தை படிப்பதினால் ஏற்படும் நன்மையை விளக்கி வருகிறார். அதே போல் இசையால் மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது, அதனை கீ போர்டு மூலம் கற்று கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்துள்ளார். மேலும் அறிவு திறன், யோகா, உடற்பயிற்சியில் சிறந்து விளங்கும் சிறுவர், சிறுமிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இன்ப சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்பதை வாக்குறுதியாக அளித்துள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த சிறுவர், சிறுமிகளோ ஒன்றாக இணைந்து கோரஸ் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அறியா பருவத்தின் போது செய்யும் குற்றத்திற்காக பல தண்டனைகளை பெற்று சிறார் சீர்திருத்தப்பள்ளி, சிறைக்கு செல்வதை தவிர்க்க, இளைஞர்களுக்கு வாழ்க்கையை வளப்படுத்தும் நல்ல பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தால் சமூகத்தில் பல சிறந்த தலைமுறைகளை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் உருவெடுத்திருக்கிறார் சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு...