தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையக் குழு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. மேலும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கி இருந்தார்.
அவற்றை செயல்படுத்துவது தொடர்பாக, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் சத்யபிரதா சாஹூ இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்படும் நிலையில், அங்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பணிகள் உள்ளிட்டவை குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் கூடுதலாக இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண் துறையின் இணைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த், சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ் ஆகியோரை இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவை தற்காலிக பணியிடங்களாக ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ளன.