திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நெற்றியில் வைத்து செல்லும் திருநீறு மற்றும் குங்குமத்தை அழித்து, நாத்திகப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு எதிராக பெற்றோர் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர், பெருமாள் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகம். தன்னை பெரியார் தொண்டராக காட்டிக் கொள்ளும் சண்முகம், மாணவிகளிடம் பகுத்தறிவு ஏற்படுத்துவதாக கூறி நாத்திகம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவிகள் வளையல் அணிவது, பூ வைப்பது, பொட்டு வைப்பது, கைகளில் கயிறு கட்டுவது போன்ற செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சண்முகம் ஒரு கட்டத்தில் மாணவிகளின் நெற்றியில் வைத்த திருநீறு மற்றும் குங்குமத்தை அழிப்பது, மாணவிகளை ஆபாசமான வார்த்தைகளில் வசைபாடுவதை வழக்கமாக்கியுள்ளார்
சில மாணவிகள் கைகளில் அணிந்து வரும் வளையல், கயிறு போன்றவற்றை கத்தரிக்கோலால் நறுக்கி அகற்றும் செயலிலும் சண்முகம் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சில மாணவிகளை தனிமையில் அழைத்து புத்தி சொல்வது போல கையை பிடிப்பது, தொட்டுப்பேசுவது என்று சில்மிஷ வேலைகளிலும் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் திருச்சி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். மாவட்ட கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவின்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் புகாருக்கு உள்ளான ஆசிரியரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் மூலமாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதில் நாத்திக பாடம் எடுப்பதாக கூறி சண்முகம் செய்த சேட்டைகள் உறுதியாகின. ஆசிரியர் சண்முகம் மீது ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
தங்களை கண்டிப்பான, ஆசிரியராக காட்டிக் கொள்ளும் சிலர், மாணவிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மேற்கொள்ளும் தந்திரம் என்று சுட்டிக்காட்டும் மனோதத்துவ நிபுணர்கள், மாணவிகள் தங்களுக்கு பள்ளியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் பெற்றோர்களிடம் தெரிவிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் சுட்டிகாட்டுகின்றனர்.
அதே நேரத்தில் மாணவிகளிடம் எல்லை மீறிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு