தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 3 ஆம் தேதி மொழித்தாள் தேர்வும், 5 ஆம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறுகிறது.
7 ஆம் தேதி அரசியல் அறிவியல், புள்ளியியல், உயிரி வேதியியல், கணிப்பொறி அறிவியல், மனை அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது. மே 11 ஆம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் தேர்வு நடைபெற இருக்கிறது. 17 ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண் அறிவியல் , , நுண் உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. 19 ஆம் தேதி தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிக கணிதம் தேர்வு நடைபெறும்.
மே 21 ஆம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல் தேர்வு நடைபெற இருக்கிறது. மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட பாடத்தை அடிப்படையாகக் கொண்டே வினாத்தாள் வடிவமைக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.