ராமநாதபுரம் அருகே 5ஆம் வகுப்பு மட்டுமே முடித்து, 25 ஆண்டுகளாக கடற்பாசிகளை சேகரித்து சொற்ப வருமானம் ஈட்டி வந்த மீனவப் பெண் ஒருவர், சற்றே மாற்றி யோசித்து சிப்பிகள், சங்குகளை சேகரித்து அலங்காரப் பொருட்களாக மாற்றி ஆன்லைனில் விற்பனை செய்து லாபமீட்டி வருகிறார்.
கையுறைகள், நீர்க்காப்புக் கண்ணாடி சகிதம் தெர்மக்கோல் மிதவையில் துடுப்பைச் செலுத்தியபடி காலை 9 மணியளவில் கடலுக்குள் சென்றால் மாலை 4 மணி வரை கடலோடு உறவாடுகிறார் சுகந்தி. குறிப்பிட்ட தூரத்தில் தெர்மக்கோல் மிதவையை நிறுத்தி தண்ணீருக்குள் இறங்கி பரபரவென கடற்பாசிகள், சிப்பிகள், சங்குகள் உள்ளிட்டவற்றை அவர் சேகரிக்கிறார்.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி, 5ஆம் வகுப்பு மட்டுமே முடித்து, கடந்த 25 ஆண்டுகளாக கடற்பாசிகளை சேகரித்து வருகிறார். மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் கணவரின் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நகர்த்த முடியாததால் தன் பங்குக்கு கடற்பாசிகளை சேகரித்தும், செயற்கையாக கடற்பாசிகளை வளர்த்தும் விற்பனை செய்து வந்துள்ளார் சுகந்தி.
கூடுதல் வருமானத்துக்கான தேடலில் இருந்தபோதுதான் தூத்துக்குடியிலுள்ள தனியார் கல்லூரி அவருக்கு சுயதொழில் குறித்தான பயிற்சியை அளித்திருக்கிறது. கடல் சிப்பிகள், சங்குகளை அலங்காரப் பொருட்களாக உருமாற்றும் அந்தப் பயிற்சி சுகந்திக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
அதன்படி கடற்பாசி சேகரிப்புக்குச் செல்பவர் அப்படியே சிப்பிகள், சங்குகள் உள்ளிட்டவற்றையும் சேகரித்து வருகிறார். அவற்றைச் சுத்தம் செய்து, முகம் பார்க்கும் கண்ணாடி, சிறு சிறு அலங்கார பொம்மைகள் என தனது கற்பனைக்கு வடிவம் கொடுக்கிறார் சுகந்தி.
தாம் உருவாக்கும் பொருட்களை வாட்சப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதலங்களில் பதிவேற்றி எளிய முறையில் விளம்பரம் செய்கிறார் சுகந்தி. அத்துடன் சிறு சிறு ஆன்லைன் விற்பனை ஏஜன்சிகள் மூலமும் தனது பொருட்களை சந்தைப்படுத்துகிறார் அவர். இதற்காக மடிக்கணினி, இணையதளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அடிப்படை பயிற்சியையும் பெற்றுள்ளார் அவர். தனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் பலரும் ஆர்வமுடன் தனது தயாரிப்புகளுக்கு ஆர்டர்கள் கொடுப்பதாகவும் கூறுகிறார் சுகந்தி.
கடின உழைப்போடு, மாற்றுச் சிந்தனையும் அதனை நடைமுறைப்படுத்தும் மனோ திடமும் எல்லாவற்றுக்கும் மேலாக தன்னம்பிக்கையும் இருந்தால் அனைவருமே வெற்றி பெறலாம் என்கிறார் சுகந்தி.