பெரம்பலூர் அருகே தனியார் பேருந்தில் கடனுக்கு டிக்கெட் கேட்டு பேருந்தை மறித்து ரகளை செய்த கோவில் பூசாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஊருக்கு செல்ல பணம் கொடுத்து அனுப்பி வைத்த போலீசாரின் கனிவு
சினிமா ஒன்றில் குடி போதையில் வடிவேலு பேருந்தை மறித்து ரகளை செய்து வாங்கிக் கட்டிக் கொள்வார்.
அதே போல நிஜத்தில் பெரம்பலூரில் டிக்கெட்டுக்கு காசு கொடுக்காமல் ஓசியில் பயணம் செய்ய முயன்ற பூசாரி ஒருவர் கையும் களவுமாக சிக்கியதால் கடனுக்கு டிக்கட் கேட்டு பேருந்தை மறித்து அலப்பறை செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த அயனாவரம் கிராமத்தை சேர்ந்த பூசாரி முருகன். பூ வியாபரம் செய்து வரும் முருகன், திருச்சி ஸ்ரீரங்கம் பூ மார்கெட்டில் 500 ரூபாய்க்கு பூ வாங்கி விட்டு ஊர் திரும்ப தனியார் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.
கூட்டத்தை பயன்படுத்தி டிக்கட் எடுக்காமல் இருந்த முருகன் , நடத்துனரிடம் சிக்கியதும், தற்போது தன்னிடம் பணமில்லை, ஊருக்கு போய் பணம் தருவதாக கூறி கடனுக்கு டிக்கெட் கேட்டுள்ளார்.
இந்நிலையில் பேருந்து புறநகர் பகுதியான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெ.1 டோல்கேட் பகுதியில் நின்றதும், பூசாரியை நடத்துனர் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கி விட்டதால், தன்னை ஒரு கோபக்காரராக காட்டிக் கொண்டு வடிவேலு பாணியில் சாலையில் ரகளையில் ஈடுபட தொடங்கினார் முருகன்..!
ஒரு கட்டத்தில் சாலையில் அமர்ந்து பேருந்தை செல்லவிடாமல் தடுத்த பூசாரி, செய்த சேட்டைகள் சொல்லி மாளாது
சாலையில் நடக்கின்ற இந்த கூத்தை பார்த்து அங்கு வந்த லால்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் என்பவர் அவர்களிடம் விசாரிக்க முயல, போலீசுக்கு அஞ்சாமல் நடத்துனரை வாய்க்கு வந்தபடி நாகூசும் வார்த்தைகளால் திட்டி தீர்த்தார் பூசாரி
பேருந்து அவரை ஏற்றாமல் புறப்பட்ட நிலையில் தன்னை நடத்துனர் ஏமாற்றிவிட்டதாக நடித்த பூசாரி உச்சஸ்தாயியில் உரக்க சத்தமிட்டபடியே பேருந்து நடத்துனரை பார்த்து சாபமிட்டு அட்டகாசம் செய்தார்
பேருந்தை நிறுத்தி இருவரையும் சமாதானம் செய்த காவல் ஆய்வாளர் பழனியம்மாள், தன் கையில் இருந்த பணத்தை நடத்துனரிடம் கொடுத்து பூசாரியை அழைத்து செல்லும்படி பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்
ஆனால் தவளை தன் வாயால் கெடும் என்பது போல பேருந்துக்குள் கூச்சலிட்டபடியே இருந்த பூசாரியால் நொந்த சக பயணிகள் அவரை இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டனர்.
தன்னை இறக்கி எங்கு வேண்டுமானாலும் கூட்டிச்செல்லுங்கள் என்று போலீசாரிடம் பூசாரி சவால் விட்டதால் அவரை போலீசார் மீண்டும் பேருந்தில் இருந்து இறக்கும் நிலை ஏற்பட்டது
அதன் பின்னர் வாய்சவடால் விட்ட பூசாரியை காவல் நிலையம் அழைத்துச்செல்லுங்கள் என்றதும், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு போன் போட்டு என்ன செய்கிறேன் பாருங்கள் என்று அப்போது அடங்காமல் பூச்சாண்டி காட்டினார் அந்த பூசாரி
திமுக பிரமுகர் நேருவின் உறவினர் ஆலத்தூர் ஒன்றிய தலைவராக பொறுப்பில் இருப்பதாகவும் அவரிடம் தகவல் தெரிவித்து பார்த்துக் கொள்வதாக போலீசாரை பூசாரி மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இருந்தாலும் அவர் விரக்தியில் பேசுவதாக நினைத்து மன்னித்து கனிவோடு விசாரித்த காவல் ஆய்வாளர் பழனியம்மாள் அவருக்கு 50 ரூபாயை கொடுத்து வேறு பேருந்தில் ஊருக்கு செல்லுமாரு அறிவுறுத்தினார்
அப்போதும் தன்னை இறக்கி விட்டுச்சென்ற தனியார் பேருந்தை ஒரு கை பார்ப்பது என்ற மன நிலையில் இருந்து அந்த கடன்கார பூசாரி மாறவேயில்லை..!