கரூர் அருகே, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்த காதல் ஜோடியில், காதலன் பலியான நிலையில் மாணவி உயிருக்குப் போராடி வருகிறார். ஜூனியர் மாணவனைக் காதலித்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கன்னிமைக்கான்பட்டியை சார்ந்தவர் அஜீத். 12ம் வகுப்பு வரை படித்து விட்டு கொரோனா ஊரடங்கால் மேல் படிப்புக்குச் செல்லாமல் வீட்டில் காத்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
சிவரஞ்சனி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3ம் ஆண்டு படித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 6 மாதங்களாக கல்லூரி பாடத்தை மறந்து காதல் பாடம் கற்றுள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெண்ணின் பெற்றோர் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சிவரஞ்சனிக்கு வேறு இடத்தில் வரன் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரிக்குச் செல்லும் திட்டத்தை மறந்து காதல் மயக்கத்தில் இருந்த அஜீத்தை, கரூர் மாவட்டம் கல்லுமடையை அடுத்த கத்தாளபட்டி கிராமத்திற்கு சிவரஞ்சனி அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள அரசமரத்தான் கோவிலில் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் துண்டைக் கட்டி தாலி தயார் செய்து சிவரஞ்சனி கழுத்தில் அஜீத் தாலி கட்டியுள்ளார்.
பின்னர், அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்ற காதல் ஜோடியினர் மருதம்பட்டி பழனியப்பன் என்பவரது தோட்டத்தில் உள்ள பாழடைந்த வீட்டின் அருகில் மறைவான பகுதியில் அமர்ந்து தங்கள் காதல் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
ஏற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தும் இரு வகையான பூச்சிக் கொல்லி மருந்தை இருவரும் குடித்துள்ளனர். வீரியம் மிக்க மருந்தை சாப்பிட்ட அஜீத் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிவரஞ்சனி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைக் கண்ட அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அஜீத்தின் உடலை கைப்பற்றி பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு குடும்பமும் தாங்கொணா துயரத்தையும், மனவலியையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது காதல் ஜோடியின் விபரீத முடிவு....