கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 58 வயதான மணமகன் ராஜன் 64 வயது மணமகள் சரஸ்வதியை காதலர் தினத்தில் கரம் பற்றினார்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள அடூரிலுள்ள மகாத்மா ஜனசேவனா கேந்திராவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜன் என்பவரும் சரஸ்வதி என்பவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்தனர். ராஜன் சரஸ்வதியை விட 6 வயது குறைந்தவர். ராஜன் திருச்சியை சேர்ந்தவர். பத்தனம் திட்டாவிலுள்ள பல ஹோட்டலில் சமையல்காரராக பணி புரிந்து வந்தார். சபரிமலை சீசன் காலத்தில் பம்பாவில் ராஜனை காண முடியும். பெற்றோர் இறந்து போனதால், சரஸ்வதி 3 ஆண்டுகளாக இந்த மையத்தில் தங்கியிருந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக வேலை இழந்த ராஜனும் இந்த மையத்தில் வந்து தங்கினார்.
தற்போது, இந்த மையத்தில் முதியோர்களை பராமரித்து அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியையும் ராஜன் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ராஜனுக்கும் சரஸ்வதிக்கும் காதல் அரும்பியது. இருவரும் தங்கள் காதலை மையத்தில் உள்ள நிர்வாகிகளிடத்தில் தெரிவித்தனர். இருவரின் காதலுக்கும் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை. யாரும் இந்த வயதில் காதலா? என்று கேலி பேசவும் இல்லை. இருவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமணத்துக்கு பிறகு, தம்பதி தங்கள் மையத்தின் அருகிலேயே வீடும் ஒதுக்கப்பட்டது. ராஜன், சரஸ்வதிக்கு காதலர் தினமான நேற்று அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது. எம்.எல்.ஏ ராஜன் கையில் தாலி எடுத்து கொடுக்க அவர், சரஸ்வதி கழுத்தில் கட்டினார். நண்பர்கள் புதுமண தம்பதியை மனதார வாழ்த்தினர்.
தங்களுக்கென்று யாருமில்லாத நிலையில், வயதான காலத்தில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை யாரும் கேலி பேசவில்லை. எல்லோருமே இணைந்து வாழ ஊக்கப்படுத்தினர் என்று கூறுகிறார் ராஜன்.