தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை ஒருபோதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீர்வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி சாதனை அளவாக நெல் விளைச்சல் கண்டுள்ளதாக தமிழக விவசாயிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று 8 ஆயிரத்து 126 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நீர் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி சாதனை அளவாக நெல் விளைச்சல் கண்டுள்ள தமிழக விவசாயிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். வேளாண்மையே நாட்டின் முதுகெலும்பு என்பதை அவ்வையாரின் வரப்புயர நீர் உயரும் என்கிற பாடலை மேற்கோள் காட்டி விளக்கினார்.
7 உட்பிரிவுகளை சேர்ந்தோர், தேவேந்திரகுல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என்றும் அதற்கான அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். மேலும் சென்னையில் நவீன மின்பிடித் துறைமுகம் அமைய உள்ளது என்றும், தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்று கூறிய பிரதமர் மோடி, தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட இல்லை என்றார்.
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை, கடற்கரை - அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதை,மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். கல்லணை கால்வாய் புனரமைப்பு திட்டம், செங்கல்பட்டில் அமையும் சென்னை ஐஐடியின் டிஸ்கவரி ஆராய்ச்சி வளாகம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஆவடியில் தயாரான அர்ஜூன் மார்க் 1ஏ டாங்குகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்லணை கால்வாய் புனரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர், துணைமுதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். பிரதமர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.