நாடு முழுவதும் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 2வது டோஸ் செலுத்தும் பணியை தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு மருந்து வீணாக்கப்படுவதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு, 28 நாள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 615 மையங்களில் 3 ஆயிரத்து 126 சுகாதாரப்பணியாளர்களுக்கு இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கடந்த ஐனவரி 16ஆம் தேதி, 3 ஆயிரத்து 126 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகத் தெரிவித்தார். முதல் நாள் பூஜ்ஜிய நாளாக கணக்கிடப்பட்டு 28 நாள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி இன்று செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.
நோய் பரவல் குறைந்துள்ளதால் தடுப்பூசி வேண்டாம் என பலர் நினைத்ததை படிப்படியாக மாற்றியுள்ளதாகவும், நேற்று மட்டும் 15,886 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தடுப்பூசி வீணாவதாக வெளியான தகவலுக்கும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.