பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளைக் காகிதமில்லாமல் நிறைவேற்றுவதற்காக இ-கையொப்பமிடும் ஆன்லைன் தளத்தை நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (NeSL) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகரமயமாக்கல் விரைவாக வளர்ந்து வரும் சூழலில் வாடகை ஒப்பந்தங்கள், பிரமாணப் பத்திரங்கள், வங்கி உத்தரவாதங்கள் போன்ற பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதையும் அனைத்து தரப்பினரும் தொலை தூரத்திலிருந்தே ஆவணங்களில் முத்திரையிட்டுக் கையொப்பம் இடுவதற்கு, இந்த இ-கையொப்பம் சேவை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சேவை, ஒப்பந்தம் மேற்கொள்வோர் அதில் கையெழுத்திடுவதற்கோ அல்லது முத்திரையிடுவதற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது. இ-கையொப்பம் இயங்குதளத்தில் உள்ள NeSL இன் இ -கையொப்பமிடுதல் மற்றும் இ-ஸ்டாம்பிங் அம்சங்களுடன் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முத்திரையிட முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
உதாரணத்துக்கு, வீட்டு வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, வாடகைக்கு விடுபவர், வாடகைக்கு எடுப்பவர்கள் மற்றும் சாட்சி ஆகியோர் ஒப்பந்தத்தை, NeSL இணையதளத்திலேயே சமர்ப்பித்து, அதில் உள்ள பேமெண்ட் கேட்வே மூலம் முத்திரையிட்டு, இ- கையொப்பமிடலாம். பதிவாளர் அலுவலகத்தின் தரகர் அல்லது ஊழியர்களின் தலையீடு இல்லாமல் ஆதார் பதிவுசெய்த மொபைல் எண்ணைக்கொண்டே இந்த இந்தப் பணியை நிறைவேற்றமுடியும்.
இ-கையொப்பம் இயங்குதளத்தின் மூலம் பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்களை எளிதாகவும், விரைவாகவும் நிறைவேற்றலாம். இது குறித்து
NeSL நிர்வாக இயக்குநர் எஸ். ராமன், “NeSL இந்தியாவின் முதல் தகவல் பயன்பாடு இ- கையொப்பம் தளம் ஆகும். எந்தவொரு கடன் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும் சட்ட ஆதாரங்களின் களஞ்சியமாகப் பணியாற்றுவதற்கான நோக்குடன் நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் பொது நிறுவனங்களால் NeSL நிறுவப்பட்டுள்ளது. இ-கையொப்பம் தளம் மூலம் தமிழக மக்களுக்குச் சேவையாற்றுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.