ஆசிய மருத்துவ வரலாற்றின் மிகப்பெரிய ஆணிவேராக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இன்று 186வது பிறந்த நாளை கொண்டாட உள்ளது.
ஆங்கிலேயர்கள் சென்னை வந்தபோது இங்குள்ள தட்பவெட்ப நிலையை ஏற்க இயலாமல் பலர் நோயுற்றனர். அவர்களுக்கு, மருத்துவ உதவிகளும், வசதிகளும் தேவைப்பட்டதால், 1664ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி கிழக்கிந்திய கம்பெனி மருத்துவனை, வாடகை வீட்டில் துவங்கப்பட்டது. நாளடைவில், அது துறைமுக மருத்துவமனை, மாநில மருத்துவமனை, மெட்ராஸ் மருத்துவமனை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
சர். எட்வர்ட் விண்டர் என்பவரால் தொடங்கப்பட்ட மருத்துவமனை தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு, கோட்டையில் இருந்து சென்ட்ரல் பகுதிக்கு மாற்றப்பட்டது. 1835ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தொடங்கப்பட்ட அந்த மருத்துவமனைதான் தற்போது ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையாக உள்ளது. முற்காலத்தில் ஐரோப்பியர்களுக்காகவும், இந்தியர்களுக்காகவும் தனித்தனியே இரு வகையான கல்வி முறை இங்கு பயிற்றுவிக்கப்பட்டது.
இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலர் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளதாகவும், அவர்களை காணொலிக் காட்சி மூலம் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பழமை வாய்ந்த மருத்துவக் கல்லூரியின் தற்போதைய முதல்வர் டாக்டர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
நீண்ட நெடிய வரலாற்று பின்னணியைக் கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இதுவரை லட்சக்கணக்கான மக்களின் நோய்களைப் போக்கி நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.