காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில், பிப்ரவரி 14 ஆம் தேதி லாக்டவுன் செய்ய ஒருவர் கோரிக்கை விடுவதும், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் வாக்குறுதி கொடுப்பது போலவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள்.
காதலர் தினம் நெருங்கி வருகிறது. உலகமுழுக்கவுள்ள காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட தயராகி வருகின்றனர். காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் பரிசு பொருள்களை ஆசை ஆசையாக தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த முறை வருகிற 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடத்தில் 90 ஸ் கிட் ஒருவர் , 'ஐயா... பிப்ரவரி 14 ஆம் தேதி லாக்டௌன் போடுங்கயா.... ' என்று கேட்பது போலவும் அதற்கு முதல்வர் உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று பதில் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் முதல்வர் அப்படி சொல்லவே இல்லை என்பதும் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக, கல்லூரி மாணவர்களில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், தேர்வுக்கு பீஸ் கட்டியவர்கள் மட்டும்தான் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. பீஸ் கட்டாதவர்கள் பாஸ் செய்யப்படவில்லை .
பிரசாரத்தின் போது, பீஸ் கட்டாத அரியர் மாணவர்களையும் பாஸாக்குங்கள் என்று மாணவர் ஒருவர் முதல்வரிடத்தில் , கேட்க அதற்குத்தான் உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று பதிலளித்தார். கம்பீரம் படத்தில் கலவரத்தை அடக்க சென்ற வடிவேலு போலீஸிடத்தில் அடி வாங்கி ,அப்படியே ரூட்ட மாத்தி விட்டுட்டாங்களே' என்று டயலாக் பேசுவார். இதே போலத்தான், இந்த வீடியோவையும் அப்படியே மாற்றி எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.