பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் அலுவலக முத்திரைகளை போலியாக பயன்படுத்தி எம்.பி, எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பல், 6 பங்களாக்கள் உள்ளிட்ட 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் செந்தில்குமாரிடம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாக கூறி ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்புவது போல் போலியாக மின்னஞ்சல் அனுப்பி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
அந்த வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த மகாதேவய்யா என்பவரை கடந்த 2018-ல் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டனை பெற்று சிறையில் இருந்த மகாதேவய்யா கொரோனா காலத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவர், தனக்கு எம்பி சீட் வாங்கித் தருவதாக கூறி, ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தன்னை ஒரு கும்பல் ஏமாற்றியதாக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இந்த மோசடியின் பின்னணியில் மகாதேவய்யா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோசடி கும்பல் மைசூரில் தலைமறைவாக இருப்பதை அறிந்த சிபிசிஐடி தனிப்படை போலீசார், அங்கு சென்று மகாதேவய்யா, அவரது மகன் அங்கித் மற்றும் இவர்களது நண்பரான ஒசூரைச் சேர்ந்த ஓம் ஆகிய மூவரை கைது செய்தனர்.
போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்திய பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல மாநில ஆளுநர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பது போல் காட்டிக்கொண்டு எம்பி, எம்.எல்.ஏ., சீட் வாங்கி தருவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, சாலை ஒப்பந்தம் போன்ற பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரிய வந்தது.
மகாதேவய்யாவின் மகனும், ME பட்டதாரியுமான அங்கித் என்பவர் தான் பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் அலுவலக முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி, போலி அரசு நியமன ஆணைகளை உருவாக்கி மெயில் மூலம் அனுப்பி நம்ப வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு நபர்களிடமிருந்து ரூபாய் ஒன்றரை கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கும் மேல் இவர்கள் மோசடி செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓசூரைச் சேர்ந்த ஓம் என்பவர் இந்த மோசடியில் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெங்களூர், மைசூர் போன்ற பகுதிகளில் மகாதேவய்யா மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். அதேபோல அவரது மகன் அங்கித் மூன்று வீடுகள் மற்றும் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு 250 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளதாகவும், மோசடி செய்த பணத்தில் இவர்கள் இந்த சொத்துகளை வாங்கி இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களால் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழகத்தில் மட்டுமே ஏமாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேறு என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டு உள்ளனர்? என்பது குறித்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.