தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். கொரோனா சூழலால், கூடுதலாக 25 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.. வாக்குப்பதிவு கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், சட்டமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் சென்னையில் இரு நாட்கள் ஆலோசனை நடத்தினர்.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்ததுடன், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்துத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் பேசினார். தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வலியுறுத்தியதாகவும், வாக்குப்பதிவு முடிந்த ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
பிற மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்துவது குறித்து முடிவெடுக்க இயலாது எனக் கூறினார்.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கவும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தவும் சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை எனக் தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார். கொரோனா சூழலில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 68 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் உள்ள நிலையில், கூடுதலாக 25ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார். வாக்காளர்களுக்குப் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கத் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் முழு அளவில் மாநிலக் காவல்துறையினர் பயன்படுத்தப்படுவர் என்றும், தேவைக்கேற்ப மத்தியப் படைகள் பயன்படுத்தப்படும் என்றார். திருவிழாக்கள், மாணவர்களுக்கான தேர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
80 வயதுக்கு மேற்பட்டோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளித்திருப்பது நாடு முழுமைக்குமான நடைமுறை எனக் கூறினார்.. சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்துக் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என, தலைமைத் தேர்தல் ஆணையர் கூறி தெரிவித்தார்.