மும்பையைச் சேர்ந்த, ஐந்து மாதக் குழந்தை, டீராவுக்கு வெளிநாட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக ரூ. 6 கோடி இறக்குமதி வரி மற்றும் ஜி.எஸ்.டி. வரியை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த, ஐந்து மாத பெண் குழந்தை, டீரா முதுகு தண்டுவட தசை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இதனால், அந்த குழந்தைக்கு நரம்புகள் செயல்படாமல், தசைகள் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. குழந்தையை குணப்படுத்த ரூ. 16 கோடி மதிப்புள்ள மருந்து வாங்க வேண்டும். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Zolgensma, என்ற மருந்துதான் குழந்தையை குணப்படுத்த உதவும். ஒரே டோஸ் கொண்ட இந்த ஊசிக்காக குழந்தையின் பெற்றோர் காமத் மற்றும் பிரியங்கா சமூகவலைத்தளத்தில் crowd funding வாயிலாக ரூ.12 கோடி நிதி திரட்டியிருந்தனர்.
மேலும், இந்த மருந்துக்கான சுங்க வரி, ஜி.எஸ்.டி வரியை தள்ளுபடி செய்ய மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி ஆகியோரிடத்தில் குழந்தையின் பெற்றோர் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.மகராஸ்டிர மாநில முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிசும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதினார்.
இந்த கோரிக்கையை ஏற்று ரூ.6 கோடி வரியை தள்ளுபடி செய்ய, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.இந்த தகவலை தேவேந்திர பட்னவிஸ், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இத்தகையை விசித்திர நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் 6 மாதத்துக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். குழந்தை டீராவுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி 6 மாதம் பிறக்கிறது. எனவே, விரைவில் அந்த மருந்தை வாங்கி குழந்தைக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.