கல்வான் மோதலில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனிக்கு அலகாபாத் ராணுவ மையத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
நாட்டின் எல்லைகளில், குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல், நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் குடும்பங்களைப் பிரிந்து வாழும் தன்னலமற்ற தியாகிகள் ராணுவ வீரர்கள். மீண்டும் சொந்த மண்ணிற்குத் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் கனவுகளைச் சுமந்து எல்லை செல்லும் பலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். சிலர் திரும்புவதே இல்லை. அந்த மாவீரர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் நம் மனதைவிட்டு மறைவதில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி , லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர் .
ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஹவில்தார் பழனி. அலகாபாத் ராணுவ மையத்தில் பணிபுரிந்து வந்தார் . துப்பாக்கி சுடுவதில் வல்லவரான அவர், பீரங்கி இயக்குவதிலும் மிகவும் கெட்டிக்காரர்.
கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இன்னுயிர் நீத்த பழனிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அலகாபாத் ராணுவ மையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றுக்கு ஹவில்தார் கே.பழனி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் , அவர் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, ஹவில்தார் பழனிக்கு வெண்கலச் சிலை ஒன்றும் இந்த கட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஹவில்தார் பழனியின் சிலையை மேஜர் ஜெனரல் ரவீந்திர சிங் நேற்று திறந்து வைத்தார்.
கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று, ஹவில்தார் பழனிக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.