சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாட்ச்மேனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுள்ளது. திருவேற்காடு, சுந்தரசோழபுரம், ஏரிக்கரையை தெருவைச் சார்ந்த உதயசூரியன் (59) என்பவர் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ளார். குடியிருப்பு வளாகத்தில் 8 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள் நேற்றிரவு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, உதயசூரியன் இரு சிறுமிகளையும் நைசாக பேசி தன்னருகே அழைத்துள்ளார்.
பின்னர், அவர்கள் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் வாட்ச்மேன் குறித்து கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், காவலாளி உதயசூரியன் சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.